உண்மையை குழி தோண்டி புதைக்கிறது ராஜபக்ச அரசு - கடுமையாக சாடிய எதிரணி எம்.பி
கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தம்மை தேசப் பற்றாளராகக் காண்பித்துக்கொண்டு பொய்யான ஆட்சியினைக் கொண்டு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஏரான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
பொய் கூறி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இது இன்று மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் எவ்வாறு மீண்டு எழ வேண்டும் என சிந்திக்க வேண்டும். நாட்டில் பொருளாதார பிரச்சனை இல்லை அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். நிதியமைச்சர் மிகவும் அமைதியாக இருக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஷ ஏனைய அமைச்சர்களை பேச வைத்து பொய் கூறிக்கொண்டு ஆட்சியினைக் கொண்டு செல்கின்றார். பொய் கூறி தவறுகளைச் சரி செய்யப் பார்க்கிறார்கள். வழக்குகளை முடிவுறுத்தும் வேலைகளைத் தான் இவர்கள் செய்து வருகின்றனர்.
தம்மை தேசப் பற்றாளர்களாக காண்பித்துக் கொண்டே இவற்றினை செய்து வருகின்றனர். இல்லை என்றால் இனவாதத்தை துாண்டி விடுகின்றனர். இல்லை என்றால் நாங்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்கிறார்கள். பொய்களைக் கூறி உண்மையினை குழி தோண்டி புதைத்துவிட்டார்கள்.
இதுவரை கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ இது தொடர்பில் பேசவில்லை. மாறாக ஏனையவர்களை தமக்கு எதிரான கருத்துக்கு எதிராக பேச வைத்து வருகின்றனர்.