வெளிநாட்டு வருமானத்திற்குள் புதைக்கப்படும் மலையக தாய்களின் வாழ்க்கை
மலையகம் இருநூரு என்று அண்மையில் தனது 200 வருட நடை பயணத்தை கொட்டி தீர்த்து கொண்டாடியது மலையக சமூகம். 200 வருட பயணத்தில் எதை சாதித்து விட்டதாக இத்தனை கொண்டாட்டம் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று இன்றளவிலும் சரியான காரணம் புலப்படவில்லை. இத்தனை வருட பயணத்தில் இன்று மட்டிலும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினை கட்டியெழுப்புவதற்கு கடன் இல்லாத ஒரு மாத திருப்திகரமான வருமானம் என்பது மலையக மக்களுக்கு பெரும் கேள்விக்குறியே !
காரணம் தற்பொழுது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பண உயர்விற்கு ஒரு நாளுக்கான மூன்று வேளை உணவென்பதே பெரும் போராட்டம்தான் இந்நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இன்னலவான மாத வருமானம் ஒரு குடும்பத்தை கட்டி எழுப்ப போதும் என நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தானம்.
வருமானம் போதவில்லை, பொருளாதாரத்தை சமாளிக்க முடியவில்லையென சொந்த நாட்டில் கத்தி கூவி களைத்து போன மக்கள் தற்போது குடும்பத்தை சமாளிக்க வேறு வழி இல்லாமல் வெளிநாட்டவன் வீட்டில் கழிவறை கழுவுவதற்கும் மற்றும் அடுத்தவன் நாட்டில் பாதை கூட்டும் அளவுக்கு நம் நாட்டில் பற்றிலந்து அங்கு செல்கின்றான்.
மலையகத்தாயின் அவலம்
எவ்வளவு அசிங்கம், சொந்த நாட்டில் உடல் வருத்தி உழைத்ததற்கான ஏற்ற கூலி கிடைக்காமல் அடுத்தவர் நாட்டில் வீட்டு வேலைக்கும், பாதை கூட்டுவதற்கும் மற்றும் எச்சில் கோப்பை கழுவதற்கும் சிறந்த கூலி கிடைக்கும் என நம் சமூகம் இன்னொருவனை நம்பி செல்வது அவர்களுக்கு வேதனையாக இருப்பதை விட பல மடங்கு தாண்டி நம் நாட்டு அரசாங்கம் எவ்வளவு வெட்கப்பட வேண்டும் ? மலையகத்தை பொறுத்தமட்டிலும் மக்களுக்கான வருமானத்தை ஈட்டுவதற்கு அவர்களுக்கு தெரிந்த ஒரே விடயம் தேயிலையும் மற்றும் தோட்ட வேலையும்தான்.
அங்கு வாழும் பாதி மக்களுக்கு அந்த வேலையை விட்டால் வேறு கதியில்லை என்பதே உண்மை ஆனால் அதையும் தாண்டி அவர்கள் வெளிநாட்டு பயணத்தை முன்னெடுப்பார்களாக இருந்தால் அவர்களுடைய வலியும் வேதனையும் எந்தளவுக்கு வாட்டி அவர்களை பலவீனப்படுத்தியிருக்கும் ? செவிடன் காதில் ஊதிய சங்கு போல கத்தி கத்தி ஓய்ந்த மக்கள் கத்துவதற்கு தொண்டையில் தண்ணீர் வற்றியதால் என்னவோ இன்று அனைத்தையும் மறந்து அடுத்தவர்களின் காலுக்குள் ஒடுங்கி ஒளிந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் மலையகத்தை பொறுத்தமட்டில் ஆண்களை விட பொருளாதார தேவையின் நிமித்தம் பெண்களே வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது. காரணம் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கான அதிகளவு வருவாய் என்பதற்கான வாய்ப்பானது அங்கு அதிகமாக காணப்படுகின்றது ஆகையால் ஆண்களால் ஈட்ட முடியாத வருமானத்தை குறுகிய காலத்தில் பெண்களால் ஈட்ட முடியும் என்பதால் பெண்கள் அங்கு செல்ல வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
பிள்ளைகளின் படிப்பு கேள்விகுறி
நம் மலையக சமூகத்தை பொறுத்தமட்டில் படித்து உயர் கல்விகளுக்காக வெளிநாடு செல்லும் பெண்களை விட வீட்டு வேலைக்கும், குழந்தைகள் பராமரிப்பதற்கும் மற்றும் ஹோட்டலில் பத்து பாத்திரம் தேய்ப்பதற்கும் செல்லும் பெண்களே மிகவும் அதிகம் காரணம் இங்கு அவர்களுக்கு கிடைக்கும் பல மாத வருவாயை அவர்களால் வெளிநாட்டு வேளைகளில் ஒரு மாதத்தில் பெற்றுக்கொள்ள கூடிய இவ்வாறான சூழலே பெருமளவில் காரணமாக அமைகின்றது.
பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்ற அவசர சூழலின் நிமித்தம் ஒரு குடும்பத்தை பொறுத்தமட்டில் அங்கு பெரிதாக தெரிவது என்னமோ பணம் மட்டுமே ஆகையால் விருப்பு வெறுப்புக்களை தாண்டி பாதுகாப்பை கூட பெருமளவில் புலப்படுத்தாமல் பெண்கள் அங்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது. அங்கு சென்றவர்களுடைய குடும்பம் பிற்பட்ட களங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு முன்னேற்றம் அடைகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு குடும்பம் என்பது சீர்க்குலைகின்றது என்பது அங்கு மறுக்கப்படாத உண்மை.
அத்தோடு ஒரு குடும்பம் ஒரு ஆணின் தலைமைத்துவம் இல்லாமல் எவ்வளவுக்கு எவ்வளவு பலவீனம் அடைமோ அதே குடும்பம் அதை விட பலமடங்கு ஒரு பெண் இல்லையென்றால் அவ்வளவுக்கு அவ்வளவு சீர்குலையும். அவள் வெளிநாட்டு வாழ்க்கையானது குடும்பத்தை கவனிக்க வேண்டும், பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், கடனை அடைக்க வேண்டும் மற்றும் குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கும்.
முடக்கப்பட்ட முட்டாள்கள்
இதனால் பிள்ளைகளை பொறுத்தமட்டில் அவர்களுடைய பொறுப்பானது சொந்தக்காரர்கள், தந்தை மற்றும் அயல் விட்டார் என்ற கட்டுப்பாட்டுக்குள் செல்லும் சூழல் அங்கு உருவாக்கப்படுகின்றது. இங்கு நூற்றுக்கு 90 வீதமான குடும்பங்கள் மட்டுமே வெளிநாட்டு வாழ்க்கையில் சீராக இருக்கின்றார்கள் மிகுதி இருப்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் இங்கு சீர்குலைக்கப்பட்டதாகவே இருக்கின்றது.
ஒரு வீட்டின் தாய் வெளிநாடு செல்லும் பட்சத்தில் அங்கு அவள் பணம் சம்பாதிக்க புறப்பட்டுவிட்டாள் என்பது மாத்திரமே அனைவரது கண்களுக்கும் புலப்படுமே தவிர அங்கு ஒரு குட்டி குருவிக்கூடு கலைக்கப்படுவது யாருக்கும் புரிவதில்லை அந்த வேதனையை அனுபவிக்கும் வரை. மலையகத்தை பொறுத்த வரை அவர்களை வாழவைக்க தேயிலை எவ்வளவு முக்கியமோ அதே போல அவர்களை அழிப்பதற்கு மது என்பது அத விட பெரிய சக்தியாக அங்கு காணப்படுகின்றது.
வெளிநாட்டு தாயின் வருமானமென்பது அங்கு அவள் குடும்பத்தை கட்டியெழுப்ப உதவது தாண்டி அங்கிருக்கும் மதுபான சாலைகளுக்கு அடித்த லாட்டரி அதிஸ்டம் என்றுகூட கூறலாம். காரணம் அந்தளவிற்கு பணத்தின் கைவரிசை மதுபான சாலைகளில் விளையாட்டை காட்டுகின்றது. தாய் வெளிநாட்டில் தந்தை மதுமான சாலையில், பணத்திற்காக உறவாடும் சொந்தங்கள் மற்றும் அயலவர்கள் என்று தேவையின் நிமித்தம் உறவாடும் உறவுகளுக்கு மத்தியில் அங்கு புதைக்கப்படும் பிள்ளைகளில் எதிர் காலத்தை கண்டவர்கள் எவர் உண்டு.
இவ்வாறான சூழலுக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகள் படிப்பை வெறுத்து பெற்றவர்கள் மீதான அன்பை இழந்து அவர் அவர் வாழ்க்கையை அவர்களாக அமைத்துக்கொள்ளும் நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். பெருமளவிலான பெண்களின் வெளிநாட்டு பயணத்தில் அவளுக்கு கிடைக்கும் பணத்தை தாண்டி அங்கு அவளுடைய கணவர், பிள்ளைகள், உடன்பிறப்பு, சந்தோசம் மற்றும் நிம்மதி எல்லாமே பறிக்கப்பட்டு இருட்டு அறைக்குள் ஒரு குடும்பமே அங்கு அடைக்கப்படுகின்றது.
அடிமை நாய்கள்
இவ்வாறான இந்த சூழலை மற்றும் இந்த வழியை வாய்த்து கொடுத்தது யார்? இந்த வழியை அமைத்து கொடுத்த புண்ணியவான்களை என்னவென்று அழைப்பது? வார்த்தைகளல் வர்ணித்து முடித்தால் அடங்குமா அவர்களின் புகழையும் ஒய்யாரத்தையும். இங்கு தனக்கான வேலைக்கேற்ற கூலி மற்றும் போதியளவு திருப்திகரமான வாழ்க்கை என்பன கிடைக்கும் பட்சத்தில் எதற்காக அவர்கள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு இடம் கொடுக்க போகின்றார்கள் ? அத்தோடு கொடுக்கவில்லை மற்றும் தரவில்லை என்று அரசாங்கத்தை குறை கூறுவதை காட்டிலும் சுதந்திரம் பெற்றும் அடிமைகளாக வாழும் நம்மை என்ன சொல்வது
200 வருட நடைப்பயணத்தை கொண்டாடிய இந்த மலையகத்தில் இன்று மட்டிலும் தோட்டத்தில் வேலை செய்யும் அம்மாக்களுக்கு ஒரு கழிவறை கிடையாது. ஒரு கழிவறையை கூட அமைக்க முடியாத நமக்கு எதற்கு இந்த வெற்றிப்பயணம்? அதற்கு பதிலாக வெற்கி தலை குணிவது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும். இந்திய தொலைக்காட்சியில் 100 நாட்களில் பத்து பேரை ஒரு வீட்டிற்குள் அடைத்து என்ன நடக்கின்றது என்று நாள் தவறாமல் நிமிடம் தவறாமல் அடுத்தவன் வீட்டை எட்டி பார்க்க தெரிந்த நமக்கு இத்தனை வருட காலமாய் நம் மலையக சமூகம் படும் வேதனையையும் மற்றும் வலியையும் சற்று நிமிர்ந்து பார்க்க நேரமில்லை.
நம் வலியை அடுத்தவன் பார்க்கவில்லை மற்றும் பேசவில்லை என்பதை தாண்டி இங்கு நாமே அதை எட்டி பார்க்கவில்லை என்பதே வருத்தமான உண்மை. இலவசம் என்ற வார்த்தைக்குள் கட்டுண்டதால் என்னவோ எஜமானுக்கு வாய்த்த அடிமை நாய்களாக நம்மை எண்ணி நம் வியர்வையை உணவாக உறிஞ்சி எஞ்சிய எலும்புகளை நமக்கு தூக்கி வீசுகின்றார்கள். இலவச மாவு மற்றும் இலவச நிதி என இலவசம் இலவசம் என்று நம்மிடம் பறித்ததை நமக்கே இலவசமாக தந்து தங்களை கடவுளாக சித்தரித்து கொள்ளவதும் அவர்களை கடவுளாக நாம் அவர்கள் வாலை பிடிப்பதும் சகஜமாகிவிட்டது.
புதைக்கப்படும் அறிவுத்திறன்
நாம் இருக்கும் சூழல் மாறும் பட்சத்தில் மாத்திரமே நமக்கான விடிவு என்பது பேசு பொருளாக மாறும். இலவசமாக கொடுக்கப்படும் மாவு என்று கொண்டாடி தீர்க்க தெரிந்த மக்களுக்கு தெரியவில்லை அது நம் அறிவை மாய்க்க கொடுத்த மந்தம் என்று. நமது அறிவு மாய்க்கப்படும் சந்தர்ப்பத்தில் நமக்கு யோசிக்கும் திறன் குறையும், யோசிக்கும் திறன் குறையும் மட்டத்தில் தவறுகள் புலப்பட மறுக்கும், தவறுகள் புலப்படாத பட்சத்தில் அங்கு எதிர்த்து கேள்விக்கேட்கும் திறன் புதைக்கப்படும், எதிர்த்து கேள்வி கேட்கும் திறன் புதைக்கப்படும் பட்சத்தில் அங்கு அனைவருக்கும் வாய்க்கப்பட்ட அடிமைகளாக நம் சமூகம் ஒடுக்கப்படும்.
இரண்டு பை மாவிற்குள் ஒட்டு மொத்த சமூகத்தையும் முட்டாளாக்கி ஒடுக்க தெரிந்த திறமை பெற்றவர்களுக்கு நம்மை வாழ்க்கை முழுவதும் ஏமாளிகளாக வைத்திருப்பதெல்லாம் கையில் இருக்கும் தூசியை தட்டுவதற்கு சமம். இதை புரிந்துக்கொள்ள முடியாத மூடர்களாக இத்தனை வருடம் பயணித்து கொண்டிருக்கின்றது நம் மலையக சமூகம். நம்மை கொண்டு அரசியல் வாழ்கின்றது என்பதை விட அரசியலை நம் முட்டாள்தானம் வாழவைக்கின்றது என்பதே ஆணித்தரமான உண்மை.
ஒரு வெளிநாட்டு பெண் என்ற கணக்கெடுப்பிலேயே ஒரு சமூகம் இங்கு வந்து நிற்கின்றது என்றால் ஒட்டு மொத்த சமூகத்தின் நிலையை எடுத்து நோக்க போனால் அனைவரது வரலாறும் அனைவரது திருவிடையாடல்களும் படங்களாக போட்டு காட்டப்படும் என்பது மறுக்கப்படாத உண்மை. அவர்களுக்கு புரிய வேண்டும் மற்றும் இவர்களுக்கு புரிய வேண்டும் என்பதை விட ஒவ்வொரு மலையக மரத்தமிழனும் மற்றும் தமிழச்சியும் அவன் வாழ்க்கையையும், அவனுக்கான மதிப்பையும் மற்றும் அவனுக்கான தனித்துவத்தையும் புரிந்துகொள்ளும் பட்சத்தில் மாத்திரமே வெழுக்கிடும் நம் சமுதாயம் உயர் இடத்திற்கு.
சுதந்திரம் பெற்ற அடிமைகள்
அடுத்தவன் கால்களை பிடித்து அடுத்தவனுக்கு பயந்து தலை குனிந்து மன்றாடி பிச்சை எடுக்க அவசியமோ மற்றும் தேவையோ நமக்கு இல்லை காரணம் அனைத்தும் நம் உழைப்பு மற்றும் அனைத்தும் நம் வியர்வை நமக்கான கூலியை தலை நிமிர்ந்து கர்வமாக கேட்க வேண்டுமே தவிர யார் கால்களிலும் விழ வேண்டிய தேவை நமக்கு இல்லை. அவ்வாறு இல்லாமல் அடுத்தவர்களை நம்பி பிழைப்போமானால் என்றும் எஜமானுக்கு வாய்த்த அடிமை நாய்களாகவே நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
என்ன வித்தியாசம் அப்போது அடிமை என்று வெளியில் சொல்லிக்கொண்டோம் இப்போது அடிமை என்று சொல்லாமல் பயணிக்கின்றோம் ஆனால் சுற்றியுள்ள எஜமான்களுக்கு தெரியும் நம் சமூகம் எப்பொழுதும் அடிமைதான் என்று. அடித்தால் திருப்பி அடிக்கும் தைரியம் நமக்கு இருக்கும் என்ற பயம் புலப்படும் பட்சத்தில் மாத்திரமே நமக்கான அங்கீகாரம் அங்கு புலப்படும்.
உழைத்ததிற்கான வருவாய் கிடைக்கவில்லை என்று வெளிநாடு ஓடுவது வீரமல்ல, கூலி கிடைக்கவில்லை என்றால் அவர்களை துரத்துவோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். சுதந்திரம் வாங்கிவிட்டதாய் பெருமையாய் வாய் வார்த்தைகளால் கேட்டுக்கொள்ளலாம் ஆனால் இரத்தம் சிந்தி வாங்கி தந்த சுதந்திரத்தை இன்று மட்டிலும் நாம் கையில் எடுக்கவில்லை என்பதே இங்கு மறுக்கப்பட கூடாத மற்றும் மறுக்கப்பட முடியாத நிதர்சனமான உண்மை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Shalini Balachandran அவரால் எழுதப்பட்டு, 24 March, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.