அரசாங்கத்தின் செயற்பாட்டால் ஆபத்தில் சிக்கியுள்ள நாடாளுமன்றம்
துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டால் முழு நாடாளுமன்றமும் மீண்டும் ஆபத்தில் சிக்கி உள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் கொவிட் தொற்றுநோய் நாட்டை மூழ்கடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் நாடாளுமன்ற ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.தொற்றுநோய்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கோரிய எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கம் கவனிக்கவில்லை.
சபாநாயகர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பக்கச்சார்பான முறையில் செயல்படுகிறார் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது வாய் மூடியிருந்த சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தின் மூலம் வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என்று கூறினார் .
கொவிட்டின் முதல் அலைகளின் போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாட்டு மக்களை தியாகம் செய்த தற்போதைய அரசாங்கம், மூன்றாவது அலைகளில் போர்ட் சிட்டி சட்டத்தை நிறைவேற்ற ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் கோரியது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
