ஸ்ரீலங்கா மீதான சர்வதேச நாடுகளின் நகர்வுகளே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை!
சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான நகர்வுகளே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த ராஜபக்ச அரசாங்கத்தின் திடீர் நடவடிக்கைக்கு காரணம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், இளமைக் காலத்தை சிறைச்சாலைகளில் தொலைத்த மனிதர்கள் விடுதலை செய்யப்படுவற்கான சூழலை பொறுப்புடன் ஏற்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் கடந்த 21ஆம் திகதி உரை நிகழ்த்திய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சரின் கருத்தை வரவேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தனது முகப்புத்தகத்தில் கருத்தொன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகை தொடர்பான தீர்மானம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ள இலங்கை பற்றிய "வாய்மொழி அறிக்கை" ஆகியவை தான் அரசாங்கத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்ததாகவும், அதன் தொடர்ச்சியே இது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தன்னிடம் கூறினார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூக ஊடகங்களில் "ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைப் பதிவேற்றினார்கள்" என்ற குற்றச்சாட்டில் அண்மைக்காலங்களில் பயங்கரவாத தடை சட்டம் மூலம், கைது செய்யப்படும் நபர்கள் குறித்தும் பேச வேண்டும் என அவர் தனது பதவில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நல்லாட்சியின் போது, 2015ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில் சுமார் 100 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை போன்று, தற்போதைய ராஜபக்ஸ அரசாங்கமும் சத்தமின்றி இதைச் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இவ்வாறான விடயங்களுக்கு தொடர்ந்தும் எமது அழுத்தங்களை கவனமாக பிரயோகிப்போம் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.