மூவாயிரம் கோடிக்கும் அதிக நட்டத்தை சந்தித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2026/2027 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், வரிக்கு முந்தைய நிலையில் 35.6 பில்லியன் ரூபா (3,560 கோடி ரூபா) நட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வருமானம் அதிகரித்த போதிலும், நிறுவனத்தின் செலவுகள் கணிசமாக உயர்ந்தமைததால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் நிதி அமைச்சின் இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, குறித்த மூன்று மாத காலப்பகுதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் 82.8 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிதிக்கு ஏற்படக்கூடிய சுமை
கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் 62.6 பில்லியன் ரூபாவாக இருந்த வருமானம் இம்முறை அதிகரித்துள்ளது.

எனினும், நிறுவனத்தின் செலவுகள் 40.4 சதவீதத்தால் அதிகரித்து, 67.8 பில்லியன் ரூபாவிலிருந்து 95.2 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக விமான எரிபொருள் செலவு 93 சதவீதத்தால் அதிகரித்துள்ளமையே செலவுகள் உயர்வுக்கான பிரதான காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதகால் குறித்த காலாண்டில் நிறுவனம் சுமார் 12.5 பில்லியன் ரூபா செயற்பாட்டு நட்டத்தையும் பதிவு செய்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டுச் செலாவணி தொடர்பான அழுத்தங்களும் நிறுவனத்தின் நிதிச் செயற்பாடுகளைப் பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள், பணப்புழக்க நெருக்கடி, அதிக பராமரிப்புச் செலவுகள் மற்றும் கணிசமான கடன் பொறுப்புகள் ஆகியவை நிறுவனத்தின் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்கு முக்கிய சவால்களாக இருப்பதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நீண்டகால நிதி நிலைத்தன்மை
இதேவேளை, தேசிய விமான சேவை நிறுவனத்துக்கு அரசாங்கம் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

175 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைத்ததைத் தொடர்ந்து, மறுசீரமைக்கப்பட்ட வங்கிக் கடன் பொறுப்புகளில் 126.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடந்த மார்ச் 20ஆம் திகதி அரசாங்கத்தின் கடன் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் குறுகியகால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நீண்டகால நிதி நிலைத்தன்மை மற்றும் அதன் காரணமாக அரச நிதிக்கு ஏற்படக்கூடிய சுமைகள் தொடர்பில் தொடர்ந்தும் கவலைகள் எழுந்துள்ள பின்னணியில் இந்த நிதி விபரங்கள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |