வடக்கு கிழக்கில் இராணுவம் மேற்கொண்ட படுகொலைகள் : நீதி கோரும் சிறிநாத் எம்.பி
பட்டலந்த படுகொலைகளுக்கு பின்னரான காலப்பகுதியில் வடகிழக்கு பகுதியில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதி கோருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் (E. Srinath) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊகடவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், ”தற்போது பட்டலந்த விடயம் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. இந்த விடயத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்
அங்கு சித்திரவதைகள், படுகொலைகள் நடைபெற்றிருந்தால் அவை விசாரிக்கப்படுவதுடன் தண்டிக்கப்பட வேண்டும். எவராக இருந்தாலும் மனித உயிர்களுக்கு மதிப்பளித்து அந்த செயற்பாடுகள் மீண்டும் நிகழாதிருக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும்கூட வடகிழக்கு பகுதியில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டிருந்த பல்வேறு வதை முகாம்களில் பல படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தவர்கள்கூட கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதுடன் அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்ட காணொளிகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
நீதியான செயற்பாடுகள்
இதற்காக நாங்கள் நீதி வேண்டி சர்வதேச நீதி விசாரணை வேண்டுமென்று அழுத்தங்களையும் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றோம். அதுதொடர்பில் தீர்க்கமாக முடிவெடுத்து இவ்வாறான படுகொலைகள், குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
விசாரணைகள் மிக நேர்மையாக முன்னெடுக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் பட்டலந்தையில் மாத்திரம் அல்ல வடகிழக்கில் பல இராணுவ முகாம்களில் நடத்தப்பட்டு வந்தன. எந்தவித பேதங்களுமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
எதிர்காலத்திலும் அவ்வாறான செயற்பாடு நடைபெறாமல் இருப்பதற்கு உறுதியான, நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நீதி பொறிமுறைகளுக்கு எமது ஒத்துழைப்புக்களும் எமது போராட்டங்களும் என்றும் தொடரும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
