யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை அவதிக்கு உள்ளாக்கிய அரச பேருந்து!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கேவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது. இதில் நகர பகுதிக்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும்.
ஆனால் இன்றைய தினம் குறித்த பேருந்தானது வழமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு தனியார் பேருந்திற்கு போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை, பருத்தித்துறை கொழும்பு, பருத்தித்துறை வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமை என்பவற்றால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றையதினம் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை சாலை முகமையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |