தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட நிபந்தனை விதிக்கும் சுமந்திரன்
தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட முடியும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது. இந்த கூட்டத்திலே விசேடமாக வரப்போகிற வரவு செலவு திட்டம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒரு கலந்துரையாடல் நடத்தி இருக்கிறோம்.
வரவு செலவுத்திட்டம்
7ஆம் திகதி ஜனாதிபதி, நிதியமைச்சர் என்ற வகையில் தன்னுடைய வரவு செலவு திட்ட யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார். அதற்கு பிறகு இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று 14 ஆம் திகதி அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் அதற்குப் பிறகு குழுக்கள் மட்டத்தில் விவாதம் நடைபெறும் அதை தொடர்ந்து மூன்றாம் வாசிப்பு இடம் பெற்று அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும். இந்த விடயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ந்தோம். நாடாளுமன்ற குழு ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுடைய நிலைப்பாடுகளை அல்லது தங்களுடைய கருத்துக்களை சொன்னார்கள்.

மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இன்றைய சூழ்நிலையிலே நாங்கள் என்ன விதமாக இதனை அணுக வேண்டும் என்கின்ற தங்களுடைய கருத்துக்களை சொன்னார்கள். இறுதி முடிவு எதுவுமே எடுக்கப்படவில்லை. நாங்கள் ஜனாதிபதி தன்னுடைய யோசனைகளை 7ஆம் திகதி முன்வைத்த பிறகு இரண்டாம் வாசிப்பு முடிவடைவதற்கு முன்னதாக எங்களுடைய அரசியல் குழுவோடு நாடாளுமன்ற குழுவும் இணைந்து வாக்களிப்பில் எப்படியாக கலந்து கொள்வது என்பது சம்பந்தமான இறுதி முடிவெடுப்பது என தீர்மானித்திருக்கிறோம்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியோடு பேச்சு
அதைத் தொடர்ந்து நாங்கள் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படுகின்ற விடயம் சம்பந்தமாக பேசப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியோடு தலைவரும் நானும் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் உரையாடி இருக்கிறோம். அது சம்பந்தமாக எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். அந்த நிலைப்பாட்டில் அவர்களும் இணங்கி வருவார்களாக இருந்தால் நாங்கள் முன்னர் இருந்ததை போல் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரோடு இணங்கி செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே அப்படியாக இணங்கி செயல்பட முன்வருமாறு நாங்கள் அவர்களுக்கு அழைப்பும் விடுக்கிறோம். மத்திய செயற்குழுவிலே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோடும் நாங்கள் இது சம்பந்தமாக பேசலாமா என்ற விடயமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. சகல தமிழ் தரப்புக்களோடும் பிரதான தலைமை தமிழ் கட்சி என்ற ரீதியில் நாங்கள் அனைவரையும் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரோடு வைத்தியர் சத்தியலிங்கம் சுவிஸ் விஜயத்தின் போது சம்பாசனைகளில் ஈடுபட்டிருக்கிறார். அது பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அரசியல் தீர்வு
அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டை தமிழ் கட்சிகள் முன்வைக்குமா என்கின்ற ஒரு கேள்வி இருக்கிறது. ஆகவே அது சம்பந்தமாக இலங்கை தமிழ் அரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இறுதியாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்க காலத்தில் அப்போதைய குழுவுக்கு முன்வைத்த யோசனை ஒன்று இருக்கிறது. அதுதான் நாங்கள் இறுதியாக ஒரு அரசாங்கத்துக்கு முன்வைத்த யோசனை. நாங்கள் அதனை மற்றவர்களுக்கும் காண்பிப்பது என்று தீர்மானித்திருக்கிறோம். அவர்கள் அதில் இணங்கி வருவார்களாக இருந்தால் அதை ஒரு பொது நிலைப்பாடாக நாங்கள் அரசாங்கத்துக்கு தெரிவிக்க முடியும் என்று தீர்மானித்திருக்கிறோம்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் அரசு கட்சி ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறது. எப்படியான விடயங்களை நாம் கதைப்பது என இதற்கு முன்னர் நடந்த மத்திய செயற்குழுவிலே எடுத்த தீர்மானத்தின் அமைவாக தலைவரும் நானும் கையெழுத்திட்டு அரசியல் தீர்வு சம்பந்தமாக அவரோடு பேசுவதற்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் இருவரையும் சேர்த்து பத்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாவும் நேரம் ஒதுக்கி தருமாறும் நாங்கள் அவரிடத்திலே கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஜனாதிபதியுடன் பேச்சு
அந்த கடிதம் அவருக்கு அனுப்பி வைக்க போகும்போது அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலே கலந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். ஆகவே அவர் திரும்பி வந்த பிறகு ஒரு நினைவூட்டல் கடிதமும் நான் அனுப்பி இருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் ஜனாதிபதியிடத்திலிருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை.

எனினும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தமிழ் அரசு கட்சிக்கு அழைப்பு விடப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்.
இதற்கு முன்னர் பல தடவைகளிலே பல்வேறு எதிர்க்கட்சிகள் சேர்ந்து செயல்படுகிற போது எங்களுக்கு அழைப்புகள் விடுப்பார்கள். நாங்கள் சில சில வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக இணைந்து பணியாற்றுகிறோம். மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சில வேலைத் திட்டங்களிலே எங்களோடு இணைந்து வருகிறவர்களோடு சேர்ந்து பயணிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் பொதுவாக ஒரு எதிர்க்கட்சிக் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பயணிக்க தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |