இலங்கையை கூறு போடத்துடிக்கும் வல்லரசுகள் - ஓரணியில் திரண்டெழுமாறு அழைப்பு
நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதை தடுக்கும் வகையில் நாட்டை நேசிக்கும் சகல தரப்பினரும் முன்வந்து தமது எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரில்வின் சில்வா (Tilvin Silva) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையின் தேசியக் கொடியினை திருகோணமலை எண்ணைக் குத வளாகத்திலிருந்து அகற்றும் வேலையினை உதய கம்மன்பில செய்து வருகின்றார். 50 வருடங்களுக்கு எண்ணைக் குதங்களின் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டமை என்பது சாதாரண விடயம்.
மக்களின் வளங்கள் - பிள்ளைகளின் எதிர்காலம். ராஜபக்ஷக்களின் திறமையற்ற ஆட்சியினால் நாடு பாரிய சிக்கல்களை எதிர்நோக்கவுள்ளது. பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை இவர்கள் உருவாக்கி மக்களை கடனாளிகளாக்கியுள்ளனர்.
இலங்கையில் இருக்கும் வழங்களுக்கு, வேறு நாடுகளுக்கு கடன் வழங்கக் கூடிய இயலுமை காணப்படுகின்றது ஆனால் இன்று பல கோடி கடனில் தவிக்கின்றது.
இலங்கையினை ஆக்கிரமிப்புச் செய்வதற்கு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆகவே எண்ணைக் குத வளாகத்தை மீட்டெடுப்பதற்கு மதத் தலைவர்கள். சமூக செயற்பாட்டாளர்கள், தேச பற்றுள்ள மக்கள், என சகல தரப்பினரும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பினை முன்வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.