மக்கள் முன்னணியின் விகாரை எதிர்ப்புப் போராட்டம் வலுவிழப்பு..! தமிழ்தேசிய ஊடகங்களையும் கடுமையாக விமர்சனம்
வலிகாமம் தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சி நேற்று ஆரம்பித்த போராட்டத்தில் மக்களின் பிரசன்னம் தொடர்ந்தும் குறைவாகவே இருந்ததுடன் வெறுமனவே 25 க்கும் உட்பட்ட கட்சி உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியமக்கள் முன்னணி இவ்வாறான போராட்டங்களை திரள்நிலைப்படுத்தி முன்னெடுக்ககூடிய வலுவிலும் தொடர்பாடல்கள் மற்றும் பரந்துபட்டஅரசியல் செயற்பாடுகளிலும் பலவீனமாக உள்ளதாக கருதப்படுகிறது.
இதனால் தமிழ்மக்களின் முக்கியமான பிரச்சினைகள் வெறும் அரசியல் பகட்டாரவாரமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பயன்படுத்தப்படுவதான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தமிழ்தேசிய ஊடகங்களையும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடுமையாக விமர்சிக்கத் தலைப்படுவது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்துவதையும் அவதானிக்க முடிகிறது.
சுரேஷ் பிறேமச்சந்திரன்
இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே தமிழ்த் தேசியத்திற்காக போராடும் கட்சி என தெரிவித்து வருகின்ற நிலையில், அவர்கள் தற்போது முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விடயம் பகிரங்கப்படுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்தி போராட்டம் நடத்திய தமிழ்த் கட்சிகள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்திற்காக நிற்கின்ற நிலையில், தாங்கள் மாத்திரமே அதற்காக பாடுபடுவதாக மக்கள் முன்னணியினர் தெரிவித்து வருவதாக சுரேஷ் பிறேமச்சந்திரன் ஐ.பி.சி தமிழுக்கு சுட்டிக்காட்டினார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சிங்கள பௌத்த மேலாதிக்கம்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள அரசாங்கம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக பல விடயங்களை செய்து வருகிறது.
அதில் முக்கியமாக இராணுவ உதவியின் பேரில் பௌத்த விகாரைகளை அமைப்பது, தமிழர் நிலங்களை கபளீகரம் செய்வது, சிங்கள மக்களை குடியேற்றுவது என்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் காணப்படும் விடயங்கள் ஆகும்.
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டங்கள் தற்போது இடம்பெறுகிறது. குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சார்ந்த மூவர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
ஏனையவர்கள் துரோகிகள்
குறித்த போராட்டத்தைப் பார்க்கும் பொது மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம், மக்களையும், அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது அரசு குறித்த போராட்டத்தின் தன்மையை பார்க்க கூடும்.
ஆனால் தற்போது இந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விடயமாகக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக இந்தப் போராட்டதை நடத்துபவர்கள் மாத்திரம் தமிழ் தேசியத்தை காப்பாற்றுபவர்கள் என்றும் ஏனையவர்கள் துரோகிகள் என்ற பார்வை அவர்களுக்கு இருக்கிறது.
ஆனால் இந்தப் போராட்டத்தின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில், மக்கள் ஆதரவு இல்லை என்ற எண்ணம் தோன்றக்கூடும்.
ஆகவே இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு குறித்த போராட்டத்தை ஒழுங்கு செய்ய வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.
