தமிழ்நாட்டின் அமைச்சரவையில் திடீர் மாற்றம்
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றப் பின் அவரது அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது.
ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவருக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. இம்முறை பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன.
கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
அமைச்சரவையில் மாற்றம்
இந்த நிலையில், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார்.
பின்னர், அமைச்சர்கள் அனைவரும் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொழிற்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் மனித வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
