முதல்வர் தெரிவு தன்னிச்சையான முடிவல்ல - அடியோடு நிராகரித்தார் மாவை
யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்தமைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள மாவை சேனாதிராசா இது தொடர்பில் விரைவில் சுமந்திரனுக்கு தான் பதிலளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சுமத்துவது ஒன்றும் புதிய விடயமல்ல.
இதற்கு முன்னரும் அதாவது நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ஊடக சந்திப்பை நடாத்தி தலைவர், செயலாளர் பற்றி பேசியிருக்கின்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் செயற்குழுவைக் கூட்டி பேச வேண்டும். அதேநேரம் அதற்கு நான் பதிலளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் பதிலளிக்க வேண்டும்.
மாநகர சபை முதல்வர் விடயத்தில் நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன்.
கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களுடன் ஆராய்ந்து தான் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனை தான் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம் என்றார்.