யாழ் கடற்பரப்பில் கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்கள்...! பிறப்பிக்கபட்ட உத்தரவு
புதிய இணைப்பு
வடபகுதி கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பருத்திதுறை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த 31 பேரும் 3 படகுகளுடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில், அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 4 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த நால்வர் தொடர்பில், சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், சந்தேகம் தீர்க்கப்பட்ட நிலையில், நாளைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன இதே வேளை வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 40 படகுடன் 310 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பிரதீபன்
முதலாம் இணைப்பு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் (TVK) விஜய் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக கடற்றொழிலாளர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக விடுவிக்க வேண்டும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையளிக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
— TVK Vijay (@TVKVijayHQ) November 3, 2025
கைது…
கைது செய்யப்பட்டுள்ள நம் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்.
மற்ற மாநில கடற்றொழிலாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் கடற்றொழிலாளர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும்.
அழுத்தமாக வலியுறுத்துகிறேன்
மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும்.

இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்