பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
எதிர்வரும் 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், போராட்டம் நடைபெறும் இந்த நாளில் மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாணவர்களை பெற்றோர் பொறுப்பேற்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று (24.6.2024) மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பள முரண்பாடுகள்
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்துடன் எமது சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக நாடெங்கிலும் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளளோம்.
அதிபர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பானது ஒற்றுமையாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதனை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கையினையே அரசாங்கம் முற்படுவதாகவும் அதனை முறியடிக்கும் வகையில் இலங்கை பூராகவும் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.
தொழிற்சங்க நடவடிக்கைகள்
தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதன் காரணமாக எந்த அச்சுறுத்தலுக்கும் ஆசிரியர்கள் அடிபணியவேண்டியதில்லையெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டிலுள்ள பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |