மக்களின் எதிர்ப்பையும் மீறி குடியிருப்புக்களின் மத்தியில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரம்!
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் குறித்த பிரதேச மக்களின் அனுமதி இன்றியும், சமூக அமைப்புகளின் அனுமதி இன்றியும் கடந்த மூன்று வார காலமாக மக்களின் எதிப்பை மீறி தொலைத்தொடர்பு ஒன்று அமைத்தது. இதன் போது தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தொலைத்தொடர்பு கோபுர வேலைப்பாடுகளை தடுத்து நிறுத்தினார்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சந்திரசேகரம் ராஜன் , குபேரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
குறித்த நிறுவனத்தினர் குறிப்பிட்ட பிரதேச வாசிகள் அல்லாது பிற பிரதேசத்தில் வாழ்கின்றவர்களின் கையொப்பங்களை வைத்துக்கொண்டே குடியிருப்புக்கு மத்தியில் கோபுரம் அமைக்கும் வேலைப்பாடுகள் ஆரம்பித்துள்ளனர். இதனை தொடர்ந்தே எதிர்ப்புகள் எழத்தொடங்கின.