மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் உருவாகும் - இரத்த ஆறு ஓடும் - அதிகார பரவலாக்கம் குறித்து பொன்சேகா!
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அதிபர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு சரத் பொன்சேகா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகி இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபரின் கருத்து

முன்னாள் மாகாண முதல்வர்கள் அனைவரும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு கிடைப்பதை விரும்புவதாக இலங்கை அதிபர் அன்மையில் தெரிவித்திருந்தார்.
இலங்கை அதிபரின் குறித்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா

ரணில் விக்கிரசிங்க அதிபராக நாட்டை பொறுப்பெடுத்ததில் இருந்து, இதுவரை 6 மாதங்கள் கடந்த நிலையில், நாடு எவ்வித பொருளாதார முன்னேற்றங்களையும் எட்டவில்லை என்பதோடு, அனைத்து இன மக்களும் உணவுக்காக கஸ்டப்படும் நிலையில் இலங்கை அதிபர் ரணில் அரசியல் இலாபத்தை தேடிக்கொள்ள முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில், 13ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதிகாரப்பரவலாக்களை மேற்கொள்ள இலங்கை அதிபர் நடவடிக்கை எடுப்பாராயின் அது மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலையை வடக்கிற்கும் தெற்கிற்கும் ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்

நாடு இருக்கும் சூழ்நிலையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கைகளை விடுவது ஆரோக்கியமானதாக இருக்காது, அது நாட்டிற்கு செய்யும் பாவம் என அவர் கூறியுள்ளார்.
எனவே, 13ம் திருத்த நடைமுறை தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க விழிப்புடன் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.