தையிட்டி விகாரை விவகாரம் : சபையில் கேள்வியெழுப்பிய சிறீதரன் எம்.பி
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களுக்கு அரசு என்ன தீர்வினை வழங்கப் போகின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய (06.03.2025) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் (Jaffna) - வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிக்குள் திஸ்ஸ ராஜமகா விகாரை என்ற பெயரில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா.
அந்த விகாரை கட்டப்பட்டுள்ள ஏறத்தாழ 20 பரப்பு காணியின் உரிமையாளர்கள் விகாரையை அகற்றி தங்களின் நிலங்களை கையளிக்குமாறு நீண்டகாலமாக அகிம்சாவழியில் போராட்டம் நடத்தி வருவதை அமைச்சர் அறிவாரா.
இவ்விகாரை அமைந்திருக்கும் காணிகள் திருத்தப்பட்டவாறாக 1950 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் அரசினால் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டுள்ளதா.
அவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளதாயின் அது தொடர்பான வர்த்தமானி பிரசுரத்தின் இலக்கத்தினையும், என்ன நோக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் அறியத்தருவாரா.
ஒரு நோக்கத்திற்காக சுவீகரிக்கப்படும் காணியினை இன்னொரு நோக்கத்திற்காக பாவிக்க முடியாது என்பதை அமைச்சர் அறிவாரா.
அவ்விகாரை அமைந்துள்ள காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினைக் கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணாண செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா.
தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசினுடைய தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா.” என்ற கேள்விகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
