பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை விவகாரம் : தூண்டப்படும் இனவாதம்
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைதான் தற்போது சமூக வலைதளங்கள் உட்பட தமிழர் பிரதேசங்களில் பாரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
தையிட்டிப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு விகாரை திறக்கப்பட்ட 2023 மே 23 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தொடர் போராட்டங்கள் கண்டனங்கள் என்பன எழுந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும், முடிவிலியாக சரியான தீர்வு வழங்கப்படாமல் குறித்த விவகாரம் வளர்ந்துகொண்டே செல்லுகின்றது.
இந்தநிலையில், குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என கடந்த காலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என தமிழ் அரசியல் தலைமைகள் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இருப்பினும், எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படாத நிலையில் தற்போது இவ்விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த 31 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது.
யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம் தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்திருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு, அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
இந்தநிலையில், ஆளுநர் கூறிய விடயத்திற்கு ஜனாதிபதி செவி சாய்த்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் (Ramanathan Archchuna) ஏற்றுக் கொண்டார்.
இவ்வாறான சூழ்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் “விகாரையை இடிக்க வாரீர்” என்ற தலைப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்ததாக துண்டுப்பிரசுரம் ஒன்று பரவி வருகின்றது.
இன்று காலையில் இருந்து இந்த துண்டுப்பிரசுரத்தினால் பாரிய சர்ச்சை கிளம்பியுள்ளது காரணம் தமிழர் பிரதேங்களை தாண்டி தென்னிலங்கை தரப்புக்களிலும் விகாரையை இடிப்பது முறையானதா என அந்த தரப்பு மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த துண்டுப்பிரசுரம் பலதரப்புக்களில் பரவி வருகின்ற நிலையில் இனவாதத்தை மக்களிடத்தில் தூண்டும் இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் மக்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக தளத்தில் பரப்பப்படும் துண்டுப்பிரசுரம் போலியானது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், துண்டுப்பிரசுரம் பல தரப்புக்களில் பரவி வரும் நிலையில், தமது அரசியல் முன்னேற்றத்திற்காக தற்போது திட்டமிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கொள்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களிடத்தில் இருந்து நோக்கும் போது, பாரிய சர்ச்சைக்குரிய ஒரு விடயம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைமையின் பெயரில் இவ்வாறான செய்திகள் பரப்பப்படும் போது அதை மக்கள் நம்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
அத்தோடு, குறித்த துண்டுப்பிரசுரத்தை உண்மை தன்மை அறியாமல் சமூக வலைத்தளங்களில் அதீக ஈடுபாடுள்ள அரசியல் தலைமைகள் மற்றும் மக்கள் என காலையில் இருந்து பகிர்ந்து வந்தனர்.
தற்சமயம் வரை அது போலி என அறியாத சிலர் எந்த நடவடிக்கைகளை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம், அது மக்களிடையேயான இனவாதத்தை தூண்டுவதற்கான வாய்ப்பாக அமையும்.
இந்தநிலையில், விகாரை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவிக்கும் மக்கள், இனவாதத்தை தூண்டும் விதமான விடயங்களுக்கு அதீத கண்டனங்களையும் தமது சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |