அநுர அரசின் இரகசிய முகவர்களாக யாழ் எம்.பிக்கள் : சுகாஸ் விசனம்
ஜனாதிபதி தலைமையில் யாழில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முரணான நிறைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் (Sugash Kanagaratnam) கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று (03) வெளியிட்டுள்ள காணொளியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ் மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான சில உறுப்பினர்கள், தமிழ் மக்களுக்கு எதிராக மிகவும் மோசமான செயலை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மற்றும் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளுக்கு பதிலாக மக்களுக்கு மாற்று காணிகளை வழங்க வேண்டும் எனவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் அத்தோடு, இவர்கள் அரசின் இரகசிய முகவர்களாக செயற்பட்டு எஞ்சியுள்ள தமிழ் தேசியத்தையும், தமிழனத்தின் நலன்களையும் அழிக்க முற்படுகின்றனர்.
தமிழ் மக்களின் வரலாறு தெரியவில்லை என்றால் அமைதியாக இருங்கள், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமே தவிர்த்து நட்ட ஈடு அல்ல என்பதை நாங்கள் தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |