பகல் உணவை உட்கொண்ட சிறுவன் மர்மமான முறையில் மரணம் -தீவிர விசாரணையில் பொலிஸார்
பகல் உணவை உண்ட பின்னர் நித்திரைக்கு சென்ற சிறுவன் மயக்கமுற்றநிலையில் கிணணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூபா நகரில் இடம்பெற்றுள்ளது. இதில் அதேபகுதியைச் சேர்ந்த நளீம் முகமட் நஸ்மிர் என்ற 07 வயது சிறுவனே மர்மமான முறையில் உயிரிழந்தவனாவான்.
பிசிஆர் பரிசோதனையில் சிறுவனுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும் சிறுவனின் மரணத்திற்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில் சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.முகம்மது ஷாபி கிண்ணியா பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இதனையடுத்து சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்தவுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.