கைதிகளின் புனர்வாழ்வு தொடர்பான நிபந்தனைகள் மறுசீரமைப்பு!
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்காக பரிந்துரைப்பதற்கான தற்போதைய நிபந்தனைகளை திருத்துவதற்கு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, சிறையில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை சுமார் 26,574 ஆக உள்ளது.
கைதிகளின் வயது எல்லை
அவர்களில் 14,130 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்படும் கைதிகளின் அதிகபட்ச வயது எல்லை 45லிருந்து 60 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
புனர்வாழ்வு நடவடிக்கை
கைதிகளை புனர்வாழ்விற்காகப் பரிந்துரைப்பதில், புனர்வாழ்வு வழக்கைத் தவிர, அவர்களுக்கு எதிராகப் பதியப்பட்டுள்ள மற்ற வழக்குகள் முடிவடைந்த பின்னரே, புனர்வாழ்வு நடவடிக்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற தற்போதைய நிபந்தனையும் திருத்தப்பட்டுள்ளது.
இத்திருத்தத்தின் பிரகாரம், பாரிய குற்ற வழக்குகள் தவிர்ந்த சிறிய குற்றங்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகும் கைதிகளை புனர்வாழ்வளிக்க பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிச் சேவை ஆணைக்குழு, உரிய திருத்தங்கள் குறித்து அனைத்து நீதி அதிகாரிகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |