ஈரானிய சமூகத்தை சீர்குலைக்க திட்டமிடும் அமெரிக்க பொருளாதாரத் தடை!
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானிய சமூகத்தை சீர்குலைத்து, நாட்டில் சமூகக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரானில் தொழிலாளர் அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஊடாக ஈரானில் சமூக வீழ்ச்சியை ஏற்படுத்துவதே அதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் சில ஈரானியர்கள் நாட்டின் எதிரிகளுடன் இணைந்து செயல்பட்டு, ஈரானுக்குள் உள்ள மக்களிடையே குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க திறைசேரி
அமெரிக்க திறைசேரி கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி “Operation Economic Outcast” என்ற நடவடிக்கையை அறிவித்திருந்தது.

ஈரானின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயைத் துண்டிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கைகள் மற்றும் கடுமையாக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் வெளிநாட்டு நாணய அணுகலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஈரானிய பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானிய அரசாங்கம் எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் தொடர்பில் பெசெஷ்கியானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |