அநுர தலைமையில் மீண்டும் திருட்டு ஆட்சி : சிறிலங்கா உலமாக்கட்சி சுட்டிக்காட்டு
தேசிய மக்கள் சக்தியில் (NPP) மோசடிக்காரர்கள் இணைந்து மீண்டும் மைத்திரி ஆட்சி போல் திருட்டு ஆட்சியே ஏற்படுமென சிறிலங்கா உலமாக்கட்சித் (United Congress Party) தலைவர் முபாறக் அப்துல் மஜீத் (Mubarak Abdul Majeed) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாக சிறிலங்கா உலமாக்கட்சித் தலைவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அச்செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வாக்குறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.
உலமாக்கட்சி கோரிக்கை
எனவே, இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem), ரிஷாத் பதியுதீனும் (Rishad Bathiudeen) முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க வேண்டுமென சிறிலங்கா உலமாக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் துரோகி என்று 2001 முதல் பகிரங்கமாக சொல்லி வருகிறேன். 2001இல் அதாவுல்லாவும் ஹக்கீமுடன் தான் இருந்தார். அப்போதெல்லாம் எங்களைத்தூற்றிய பழைய, புதிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இப்போது ஹக்கீமைத் தூற்றுகிறார்கள்.
எனினும், உண்மை மிக தாமதமாகத்தான் புரிய வரும். அது போன்று தான் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற திருட்டுக் கட்சிக்காரர்களைச் சேர்க்கமாட்டோம் என ஜேவிபியின் அநுர குமார (Anura Kumara Dissanayake) பேசி வந்தார்.
ஆனால், இப்போது அதாவுல்லாவின் (A. L. M. Athaullah) கட்சியில் மாகாண சபை உறுப்பினராக இருந்து பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதன் தலைமை நிர்வாகத்திலிருந்த ஒருவரை தேசிய மக்கள் சக்தி தன்னோடு இணைத்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவ்வாறாயின், ஏமாற்றுக்கட்சியிலிருந்து கொண்டு சமூகத்தின் வாக்குகளை விற்று சுக போகம் அனுபவித்த கட்சியின் அனைத்துச் செயல்களுக்கும் துணை போய் விட்டு இப்போது கட்சி மாறினால் நல்லவரா.
மைத்திரி ஆட்சி
இப்படியானவர்களை தேசிய மக்கள் சக்தியில் இணைப்பதன் மூலம் தற்போது அநுரகுமார தன் கொள்கையிலிருந்து விலகி திருடர்களை இணைக்காமல் வெற்றியைப்பெற முடியாதென்ற நிலைக்கு வந்துள்ளாரா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இது தவிர, மாற்றமென்பது ஆட்களை மாற்றுவதால் ஏற்படாது, நல்ல அரசியலை உருவாக்கும் மன மாற்றம் மக்கள் மனதிலும் அரசியல்வாதிகள் உள்ளத்திலும் வர வேண்டும்.
பாத்திரங்கள் வேறு, கள்ளு ஒன்று தான் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) கட்சி செயலாளராக இருந்த மைத்திரி (Maithripala Sirisena) பல்டி அடித்ததும் அவர் நல்லவராகி விடமாட்டார் என அப்போதே சொன்ன ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமாக் கட்சியாகும்.
ஆனால், இல்லையில்லை என முஸ்லிம் சமூகம் மறுத்து இறந்துபோனவனும் வந்து மைத்திரிக்கு வாக்குப்போட்டான். கடைசியில் மகிந்த ஆட்சியை விட மோசமானது. ஹக்கீம், ரிசாத், தமிழ் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்த மைத்திரி ஆட்சி என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
மேலும், ஒரு கட்சியிலிருந்து சுக போகம் அனுபவித்து விட்டு சந்தர்ப்பத்துக்கு கட்சி மாறுபவன் நிச்சயம் பெரும் மோசடிக்காரன். இப்படியான இன்னும் பல மோசடிக்காரர்கள் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து மீண்டும் மைத்திரி ஆட்சி போல் திருட்டு ஆட்சியே ஏற்படும்“ என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |