மூட்டிவிட்டு சண்டைக்கு இழுக்கிறது கூட்டமைப்பு - அப்துல் மஜீத்
அடிக்கடி தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னர் மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள். அதைத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனும் செய்துகொண்டிருக்கிறார் என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை - கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கலையரசன் கூறுவது போன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் நிலத்தை முஸ்லிம்கள் எங்கு கையகப்படுத்தியுள்ளார்கள். கொலோனி 12, 05 போன்றவற்றில் முஸ்லிம்களும் 7ஆம் கொலனி, வீரமுனை போன்ற பிரதேசங்களிலும் தமிழர்களும் வாழ்கிறார்கள்.
இங்கு யாரும் யாருடைய நிலத்தையும் சுரண்டவில்லை. அடாத்தாக யாரையும் குடியெழுப்பவும் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து முன்வைக்கப்படும் பிரசாரங்களே இவையாகும்.
அப்படி யாராவது செய்திருந்தால் அவர்களுடன் நல்ல உறவைப் பேணிக்கொண்டு சம்பந்தன் ஐயாவின் வீட்டில் புரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக உள்ள ரவூப் ஹக்கீமிடம் பேசி தீர்க்கலாம்.
முஸ்லிங்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதையும் பேசி சாதிக்கும் நிலையே இருக்கிறது.
கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கிடையே சகோதரத்துவத்துடன் எழும் பிரச்சினைகளை தீர்த்துவைக்க வேண்டியது ஹக்கீமினதும், சம்பந்தனினதும் பாரிய பொறுப்பாகும் என்றார்.