அணு ஆயுதக் கனவை கைவிட்டது ஈரான்: இஸ்லாமாபாத் பயணத்திற்குத் தயாராகும் ட்ரம்ப்
ஈரான் நாடு அடுத்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அணு ஆயுதங்களை வைத்திருக்கப் போவதில்லை என ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் ஒரு சிறந்த ஒப்பந்தம் எட்டப்படவுள்ளதாகவும், அது அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு பிராந்தியத்தை உறுதி செய்யும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அணு ஆயுதங்கள்
20 ஆண்டுகளுக்கு மேலாக அணு ஆயுதங்கள் எதையும் ஈரான் உருவாக்காது என்பதற்கான மிகவும் வலிமையான வாக்குறுதி அமெரிக்காவிற்குக் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக ஒப்படைக்க ஈரான் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்த ட்ரம்ப், தற்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தை ஒரு மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாகக் கருதுகிறார்.
ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்தம் ஏப்ரல் 22 அன்று முடிவடைய உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இந்த இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தியோகபூர்வமான உறுதி
இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கையெழுத்திடப்படும் பட்சத்தில், அதில் பங்கேற்கத் தான் அங்கு நேரில் செல்லக்கூடும் எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்து ஈரானியத் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆரம்பத்தில் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவதற்கு 20 ஆண்டுகள் என்ற காலக்கெடுவை அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் முன்மொழிந்த போது ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்த போதிலும் தற்போது 20 ஆண்டுகளுக்கு அப்பாலும் ஈரான் அணு ஆயுதங்களைத் தவிர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால் இது மத்திய கிழக்கில் கடந்த ஆறு வாரங்களாக நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |