போர்க்களத்தில் முதன்முறையாகப் சொந்த பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட FP-7 தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணையை முதன்முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தியுள்ளது என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிட்ட பதிவில், “உக்ரைனின் தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணை FP-7. முதல் போர்ப் பயன்பாடு” என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டதுடன், அடுத்த கட்டமாக அதன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பிலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஏவுகணை எந்த இலக்கைத் தாக்கியது அல்லது எந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
உக்ரைனிய இராணுவ ஆய்வாளர்களின் தகவலின்படி, FP-7 சுமார் 200 கிலோமீற்றர் வரையான தாக்குதல் தூரம் கொண்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.

இதனை அமெரிக்காவின் ATACMS ஏவுகணையுடன் சில ஆய்வாளர்கள் ஒப்பிட்டுள்ளனர்.
FP-7-ஐ தயாரிக்கும் உக்ரைனிய நிறுவனமான Fire Point, இந்த ஏவுகணை ஐரோப்பிய Freyja ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனையும் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல்
இதனிடையே, Fire Point நிறுவனம் FP-9 எனப்படும் நீண்ட தூர ஏவுகணையையும் உருவாக்கி வருகிறது. அதன் தாக்குதல் தூரம் சுமார் 850 கிலோமீற்றர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், உக்ரைன் தனது சொந்த ஏவுகணைத் திறன்களை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
FP-7 இன் முதல் போர்ப் பயன்பாடு, அந்த முயற்சியில் புதிய கட்டமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |