ஹோர்முஸ் நீரிணைப் போரினால் முடங்கிய உர விநியோகம்! ஏற்படவுள்ள பெரும் நெருக்கடி
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் பெரும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளர் ஜோர்ஜ் மொரேரா டா சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளமையினால் இந்நிலை ஏற்படகூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயிர்க்காலம்
விவசாயிகளுக்கான பயிர்க்காலம் நெருங்கி வருவதால் அடுத்த சில வாரங்களுக்குள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடனான திட்டத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளார்.
ஓமானில் ஐக்கிய நாடுகளின் ஊழியர்களைக் கொண்ட ஒருங்கிணைப்பு மையத்தை அமைத்து கப்பல்களைப் பதிவுசெய்து பாதுகாப்புடன் அந்த நீரிணை வழியே இயக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

உலக அளவில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் உரமான யூரியா ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கும், சல்பர் ஏற்றுமதியில் பாதியும் வழக்கமாக இந்த நீரிணை வழியே எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஆனால் போர் காரணமாக உரக் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் சொற்ப அளவிலேயே நடைபெறுகிறது.
விவசாய உற்பத்தி
எனினும், அமெரிக்காவும் ஈரானும் உடன்பட்டால் ஏழு முதல் பத்து நாட்களுக்குள் இந்த விநியோக முறையைச் செயற்பாட்டிற்குக் கொண்டுவர முடியும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தினமும் குறைந்தது ஐந்து கப்பல்கள் சென்றாலே பேரழிவைத் தவிர்க்க முடியும் என உதவிப் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் உரத் தட்டுப்பாட்டினால் விவசாய உற்பத்தி கணிசமாகக் குறைந்து உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயரும் அபாயம் உள்ளது.
இறக்குமதி உரங்களையே பெரும்பாலும் நம்பியிருக்கும் தெற்காசிய விவசாயிகள் ஏற்கனவே அதிக செலவு மற்றும் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஸ்பெயின் நாட்டின் விவசாயிகளும் அதிக உற்பத்திச் செலவைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |