நாட்டிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வாட்ஸ்அப் ஊடாக ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பல்வேறு நபர்களின் வாட்ஸ்அப் எண்களினூடாக சம்பந்தப்பட்ட நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஹேக்கர்கள் கும்பலை வழிநடத்தும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் குறித்து சர்வதேச காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை கணினி குற்றப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆள்மாறாட்டம்
இந்தநிலையில், சம்பந்தப்பட்ட நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்து வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பும் இந்த ஹேக்கர்கள், இந்த மோசடியை மிகவும் நுட்பமான முறையில் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், எக்காரணம் கொண்டும் தங்கள் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தேவையில்லாமல் வெளியிட வேண்டாம் என காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களில் கணினி குற்றப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இலங்கைக்கு வந்திருந்த நைஜீரிய கணினி குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிமையாளர்கள்
தொடர்புடைய வாட்ஸ்அப் எண்களின் உரிமையாளர்கள், ஹேக்கர்கள் பணம் சேகரிக்கும் வங்கிக் கணக்குகள் குறித்து மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கும் புகார் அளித்துள்ளனர்.
அத்தோடு, இந்த உரிமம் பெற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து மோசடியாக பணம் பெறுகின்றமை தொடர்பில் மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு அவதானித்துள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வாட்ஸ்அப் பயனர்கள், இந்த ஹேக்கர்கள் குறித்து தொடர்புடைய முறைப்பாடளித்துள்ள நிலையில், விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஹேக்கர்கள் வெளிநாட்டிலிருந்து இந்த செயல்முறையை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
