ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த பாய்ச்சல்!
ஈரானின் எரிசக்தி மற்றும் வங்கித் துறைகளை இலக்காகக் கொண்டு, ட்ரம்ப் நிர்வாகம் பல நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது புதிய தடைகளை விதித்துள்ளது.
தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள நுகர்வோருக்கு, பல நூறு மில்லியன் டொலர் மதிப்புள்ள ஈரானிய திரவ பெட்ரோலிய வாயுவை (LPG) கடத்துவதற்குப் பொறுப்பான நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் பிணையத்தை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயு, "ஓமான் நாட்டின் எல்பிஜி" என்று வேண்டுமென்றே போலியாக மாற்றப்பட்டு கடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஆறு கப்பல்களுக்கு தடை
அமெரிக்க நிதித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, மார்ஷல் தீவுகளைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் நான்கு நிறுவனங்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உட்பட மொத்தம் 12 நிறுவனங்கள் இந்தத் தடைகளின் மூலம் இலக்காக்கப்பட்டுள்ளன.

மேலும், பனாமா நாட்டுக்கொடியுடன் பயணிக்கும் நான்கு டேங்கர் கப்பல்கள் உட்பட மொத்தம் ஆறு கப்பல்கள் மீதும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், ஈரானின் முக்கிய பணப்பரிமாற்ற நிறுவனம் மற்றும் அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உள்ளிட்ட பலரது மீதும் இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |