சர்வதேசத்திற்கு அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பு! ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக சர்வதேசக் கூட்டணி ஒன்றைப் உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் பென்டகன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான 'கடற்படை சுதந்திர கட்டமைப்பு (MFC) ) எனும் திட்டத்தை இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ அங்கீகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான கடல்சார் உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான முதற்படியாக இந்தத் திட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகங்களுக்கு அறிவிப்பு
இராஜாங்கத் திணைக்களம் நட்பு நாடுகளுக்கும் கப்பல் போக்குவரத்துத் துறைக்கும் இடையிலான இராஜதந்திர மையமாகச் செயற்படும் அதேவேளை, புளோரிடாவில் உள்ள சென்ட்கொம் (CENTCOM) தலைமையகம் கப்பல் போக்குவரத்தை நிகழ்நேரத்தில் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் தவிர்த்து, ஏனைய நட்பு நாடுகளுக்கு மே முதலாம் திகதிக்குள் இது தொடர்பான முன்மொழிவை வழங்குமாறு அமெரிக்கத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்பின் நேரடி அழுத்தம்
கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் குறித்த நீரிணையை முடக்கியதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் திட்டம் ஈரானுக்கு எதிரான ஜனாதிபதி ட்ரம்பின் நேரடி அழுத்தப் பிரசாரங்களில் இருந்து வேறுபட்டது என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |