சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உறுதுணை
சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடனான சந்திப்பை தொடர்ந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கான உறுதிப்பாடு
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்தி குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது, இலங்கையின் வர்த்தக மற்றும் தனியார் துறையினரை முன்னிறுத்திய அபிவிருத்திக்கு துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்துக்கள் அவசியமானவை என ஜூலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றின் வெளிப்படையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயல்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சாலிய பீரிசுடனான சந்திப்பு
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸை ஜூலி சங் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது, சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் (Online Safety Bill) ஆகியவற்றின் வரைபை தயாரிப்பதில் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒத்துழைப்பு குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.