பிராந்திய பாதுகாப்புக்காக எதையும் செய்வோம்! ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு அமெரிக்க எச்சரிக்கை
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டணி படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிலிருந்து ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலளிக்கத் தயாராக இருக்கும் என அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் எச்சரித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் தொடங்கிய இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈராக்கில் எஞ்சியிருந்த கடைசி இராணுவத் தளத்திலிருந்தும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் படைகள் வெளியேறிய நிலையில் அது குறித்து மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட தகவலின்படி, Operation Inherent Resolve (OIR) எனப்படும் நடவடிக்கையின் ஈராக் தொடர்பான பணி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கை
இனி இந்தப் பணிக்குழு ஜோர்தானை தலைமையிடமாகக் கொண்டு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடரும் என தெரிவித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்கா தனது ஈராக் கூட்டாளிகளுக்கு தொடர்ந்து பயிற்சி மற்றும் உளவுத்துறை ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் கூறுகையில்,
“ஈராக்கின் பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பையும் ஈராக் அரசாங்கத்துக்கும் ஈராக் மக்களுக்கும் ஒப்படைத்து நாங்கள் பின்வாங்குகிறோம்.
இருப்பினும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டணி படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிலிருந்து ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலளிக்கத் தயாராக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கத் தாயகத்தைப் பாதுகாப்பதற்கும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து விழிப்புடனும் தயார்நிலையுடனும் இருப்பது அவசியம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |