தமிழர் பகுதியில் நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளுடன் இளைஞன்!
வவுனியாவில் போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை விற்பனை செய்த ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து 400 மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
வவுனியாவில், போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை செய்யப்படுவதாக போதை தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடியின் ஆலோசனையில் உப காவல்துறை பரிசோதகர் மதுசங்க வழிகாட்டலில் காவல்துறை உத்தியோகத்தர் கேரத் (14692) , மேலும் காவல்துறை உத்தியோகத்தர்களான ரணில் (81010) , சமிந்த (82175) , மிதுசன் (91800) , தினேஸ் (99172) ஆகியோர் அடங்கிய குழுவினர் திருநாவற்குளம் பகுதியில் குறித்த நபர்களை மறித்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர்.
போதை மாத்திரையுடன் கைது
இதன் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரின் உடமையிலிருந்து PREGABALIN CAPSULES GABIN-150 என்ற போதையினை ஏற்படுத்தக்கூடிய 400 மருந்து வில்லைகளை கைப்பற்றியதுடன் குறித்த மருந்து வில்லைகளை வைத்திருந்த 23வயதுடைய இளைஞர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
PREGABALIN CAPSULES GABIN-150 என்ற குறித்த மருந்துகள் அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் சமயத்தில் போதையினை ஏற்படுத்தக்கூடியது எனவும் மருந்தகங்களில் 20 ரூபா தொடக்கம் 50 ரூபாவிற்குள் விற்பனை செய்யப்படும் மருந்தினை இவர்கள் 500ரூபா தொடக்கம் 600ரூபா வரையில் விற்பனை செய்வது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆயிரக்கணக்கான போதைமாத்திரைகள் கொள்வனவு
அதனையடுத்து, சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் வவுனியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை
இது பாரிய குற்றம் என வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நிலக்சன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் , வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகளான பிரசன்னா மற்றும் அரங்கன் , உணவு மருந்து பரிசோதகர் , வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியோர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.