தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய வாகனங்கள்! மேலும் பல குற்றச் சம்பவங்களுடனும் தொடர்பு...
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான விசாரணைகளில் அடையாளம் காணப்பட்ட, குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று வாகனங்கள் மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது மகன் யோஷித ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக குறித்த மூன்று டபிள் கெப் வாகனங்களும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வசீம் தாஜுதீன் கொலைச் சம்பவத்துடன் இந்த மூன்று வாகனங்களும் நேரடியாக தொடர்புடையதாக முன்னதாகவே விசாரணை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
வாகனங்களின் பயணப் பதிவுகள்
இந்நிலையில், குறித்த வாகனங்களின் பயணப் பதிவுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதுடன், சில வாகனங்களுக்கான பயணப் பதிவுகள் காணப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, அவை வேறு சில குற்றச் சம்பவங்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதுடன், பல்வேறு தரப்பினரால் அவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவை வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |