ஐ.நாவில் சிறிலங்காவுக்கு விழப்போகும் பலத்த அடி
தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் சிறிலங்கா வெளிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலேயே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையை சிறிலங்கா முழுமையாக நிராகரிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே சிறிலங்கா வெளிவகார அமைச்சர் தலைமையிலான குழு நேற்று ஜெனிவா சென்றுள்ளது.
அத்துடன் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரேரணை இறுதி வடிவம் பெறுவதற்கு முன்பதாக இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இலங்கையின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தவும் அமைச்சர் தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இலங்கைக்கான ஆதரவு
இந்த நிலையில் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படும் போது ஆறு நாடுகள் மாத்திரமே சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு ஆதரவாக கடந்த காலங்களில் வாக்களித்த பங்களாதேஷ், ரஸ்யா போன்ற நாடுகள் இம்முறை மனித உரிமை பேரவையில் உறுப்புரிமை பெறவில்லை.
அத்துடன் இந்தியா இம்முறையும் வாக்கெடுப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுவதுடன், பிராந்திய வல்லரசின் அழுத்தங்கள் காரணமாக நேபாளமும் வாக்கெடுப்பை தவிர்க்கும் எனக் கூறப்படுகிறது.
வழமையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.