எல்லை தாண்டிச் செல்ல வேண்டாம்: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
இராமேஸ்வரத்திலிருந்து (rameshwaram) கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடற்றொழிலுக்கு செல்லும் போது உயிர் காக்கும் உபகரணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி (Abdul Qader Jailani) உத்தரவின் பேரில் இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தல்விடுத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடற்றொழிலாளர்களிடையே அச்சம்
கடந்த ஒரு வாரத்தில் 30 இற்கும் மேற்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 கடற்றொழிலாளர்களையும் எல்லை தாண்டி பிடித்ததாக இலங்கை கடற்படை (srilankan navy) கைது செய்து யாழ்ப்பாணம் (jaffna) சிறையில் அடைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நேற்று நாகை கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக கடற்றொழிலாளர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்து வருவதால் கடற்றொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |