அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிடுவதற்கு வருவதைத் தவிர்க்குமாறும், அது மிகவும் ஆபத்தானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி (Pradeep Kodippili) தெரிவித்துள்ளார்.
வெள்ள நீர் மிகவும் வேகமான நீரோட்டத்துடன் பாய்வதாகவும், அதனால் நீரில் குளிப்பதையும், களியாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிக மழையுடனான வானிலையால் மண் நிரம்பியுள்ளதால் (நீர் செறிவடைந்துள்ளதால்) தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடனடியாக அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வந்த நிவாரணக் குழு
அத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள நிவாரணக் குழுக்கள் முன்னெடுக்கும் பணிகளைப் பாராட்டிய அவர், அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

நிவாரணங்களை வழங்கும்போது மாவட்டச் செயலாளர் ஊடாக உரிய முறைமைக்கு அமைய அந்தச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |