பலஸ்தீன விடுதலைக்கு நமது பங்களிப்பென்ன...!
பலஸ்தீனத்தில் அமைந்துள்ள அல்அக்ஸா இஸ்லாமியர்களின் முதல் கிப்லா என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. நமது இப்போதும் நமது மூன்றாவது புனிதத் தளம். நமக்கு நபிகள் என அருள்மறை அல்குர்ஆன் குறித்து காட்டுகின்ற பல நபிமார்கள் அதன் உருவாக்கத்திலும் புனரமைப்பிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.
இஸ்லாத்தின் கைகளில் இருந்து எதிரிகளால் கைப்பற்றப்பட்டு நம் கையை விட்டுப் போன நமது புனிதத் தளம் மீண்டும் இரண்டாம் கலீபா உமர் ரழி அவர்களின் ஆட்சிக் காலத்தில் போரிட்டுக் கைப்பற்றி இஸ்லாமிய ஆளுடையின் கீழ் மீண்டும் கொண்டு வரப்பட்டது.
மீண்டும் இஸ்லாமிய ஆளுகையின் கீழ்
மீண்டும் நமது கைகளில் இருந்து பறிபோன அல்அக்ஸா ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் இஸ்லாமிய பேரரசுக்கும் மிக நீண்டகாலம் நடந்த சிலுவை யுத்தத்தங்களின் போது சல்தான் சலாகுத்தீன் ஐயூபி அவர்களின் தீரம்மிக்க போர்த் தந்திரங்கள் மற்றும் திட்டமிடல்களால் மீண்டும் இஸ்லாமிய ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டு இன்று வரை முஸ்லிம்களின் கைகளில் உள்ளது.
உலகத்தின் கட்டுப்பாட்டை யார் கையில் வைத்துக் கொள்வது என்ற வல்லாதிக்கப் போட்டியின் ஆடுகள மையமாக பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் நிலப்பரப்புகள் மேற்குலகத்தால் கையாளப்படுகின்றன.
திட்டமிட்ட அடிப்படையில் மேற்குலகத்தால் சிதைப்பு
முதலாம் உலக யுத்தத்தின் பின்னரான உலக ஒழுங்கை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையிலான மேற்குலகம் நகர்த்திய காய்கள் கணிசமான வெற்றியை அவ்வணிக்கு தந்தன. (இது விரிவாகப் பேச வேண்டிய பரப்பு) இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை இஸ்லாமிய உலகம் கிலாபத் என்ற அகன்ற சாம்ராஜ்யக் கட்டமைப்புக்குள்ளேயே இருந்தது . துருக்கியை தலைநகராக கொண்ட உஸ்மானிய பேரரசு திட்டமிட்ட அடிப்படையில் மேற்குலகத்தால் சிதைக்கப்பட்டது.
இஸ்லாமிய சாம்ராஜ்யம் மீண்டும் உருவாகாத வகையில் தேசங்களை துண்டாடுவதற்காக தேசியவாத எண்ணக்கருக்கள் விதைக்கப்பட்டு அது அறபுத் தேசிய வாதமாக காண்பிக்கப்பட்டு இஸ்லாமிய சாம்ராஜ்யம் துண்டாடப்பட்டது.
அதாவது ஒரே குடையின் கீழ் இருந்த பல தேசங்கள் பிராந்தியங்களை தனித்தனி தேசங்கள் மாற்றி ஈற்றில் அவைகளை தனி நாடாக மாற்ற அம்மக்களுக்குள்ளே தேசியவாத எண்ணக்கருக்களை விதைத்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கெதிராக அம்மக்களை தூண்டிவிட்டு உலகத்தில் பல புதிய நாடுகளை உருவாக்கி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் இல்லாமலாக்கப்பட்டது.
தொடர் தலையிடி
மீண்டும் முஸ்லிம் நாடுகள் ஒன்று சேர்ந்து மீண்டும் இஸ்லாமிய கிலாபத் உருவாகி உலகம் தங்களின் கைகளில் இருந்து விடுபட்டு விடக் கூடாது என்பதற்காக இஸ்லாமிய உலகத்தை ஒரு கொதி நிலையில் வைத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களின் இதயத்தை கவனமாக கண்டு பிடித்து அதன் நடுப் பகுதியில் ஆழமான ஆப்பு அடிக்கப்பட்டது.
அதுதான் இன்றுவரை தொடரும் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினை. நாசிச கொள்கையாலும் பாஸிஸ கொள்கையாலும் பெரும் பாதிப்பை சந்தித்து உலகமெங்கும் சிதறி வாழ்ந்த யூதர்களை ஒன்று சேர்த்து பல்வேறு முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் திட்டமிட்ட அடிப்படையில் பிரித்தானியா மற்றும் மேற்குலகம் 1948 ம் ஆண்டு பலஸ்தீன மக்களின் எந்தவித சம்மதத்தையோ அங்கிகாரத்தையோ பெறாமல் பலஸ்தீன மக்களின் நிலத்தில் இஸ்ரேல் என்ற சட்டரீதியற்ற நாட்டை உருவாக்கி தொடர் தலையிடியை இஸ்லாமிய உலகத்திற்கு இன்றுவரை கொடுத்து வருகின்றது.
உலகத்தில் மிக நீண்டகாலமாக நிலவும் இந்த பலஸ்தீன மக்களின் நியாயமான பிரச்சினையை உலகம் திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணித்து வருகின்றது. மிக நீண்டகாலமாக இப் பிரச்சினை தொடருவதால் முஸ்லிம் மக்களும் ஆரம்ப நாட்களில் இப்பிரச்சினையில் காட்டிய ஈடுபாட்டை படிப்படியாக குறைத்து விட்டனர்.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோசமெழுப்பி
நாங்க படிக்கின்ற நாட்களில் நமது எல்லா முஸ்லிம் ஊர்களிலும் நோன்பு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை குத்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படும். ஜூம்மா தொழுகையை தொடர்ந்து மக்கள் ஊர்வலமாக சென்று பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோசமெழுப்பி அரசாங்க அதிகாரிகளிடம் மகஜர் கையளிப்பதோடு பலஸ்தீனப் விடுதலைக்காக அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்திப்பர்.
இவ்வாறு நானும் நண்பர்களும் பல தடவை இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த செயல்பாங்கை தற்போதைய இளைய சமூகத்திடம் காணமுடியவில்லை.
தானும் தன் வயிறும் நிரம்பினால் போதும் என திரிகின்றனர்.
பலஸ்தீனம் நம் எல்லோரினதும் தலையாய பிரச்சினை.
நாம் என்ன செய்யலாம் ?
ஐவேளை தொழுகையிலும் தகஜ்ஜத் தொழுகையிலும் இருகரம் ஏந்தி பலஸ்தீன மக்களின் விடிவிற்காக
உலக முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரச் சொல்லி அல்லாஹ்விடம் இரஞ்சுவோம்.