மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்யாது செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகிய கோட்டாபய!
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ(Gotabaya Rajabaksha), செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகியிருப்பதாக ஆளும் பங்காளி கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள விமல் வீரவன்ச, பொருத்தமான தீர்மானங்களை எடுத்து, அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவை சந்திப்பில் தாம் வெளியிட்ட கருத்து தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து தெளிவுப்படுத்தும் வகையில் விமல் வீரவன்ச பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்யவில்லை என்பதை தாண்டி, மாறாக எதிர்பார்க்காத விடயங்களை மேற்கொண்டு வருகின்றமையே அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைய காரணம் அவர் கூறியுள்ளார். அடிக்கடி அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் உருவாகும் மக்களிடையேயான நம்பிக்கையின்மையை தோற்கடித்து, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்காக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது, அமைச்சரவை பத்திரங்களை ஒரே நாளில் சமர்ப்பித்து நிறைவேற்றாது, அதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்கி கலந்துரையாடல்களை மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்பதுடன், தற்போதைய ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும், கூட்டுத் தீர்மானங்களை எடுக்கும்போது, கட்சித் தலைவர்கள் கூட்டம் போன்றவற்றில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியுமாக இருக்குமெனவும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.