நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண் விமானம் மூலம் யாழ். போதனாவிற்கு
நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவர் நேற்றைய தினம் பாம்பு கடிக்கு இலக்காகிய நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
கடல் கொந்தளிப்பு
மேலதிக சிகிச்சைக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்வழி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலை காணப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தகவல் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி
அந்தவகையில் விரைந்து செயற்பட்ட மேற்குறித்த தரப்பினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்று, விமானப்படையின் உதவியுடன் அவரை விமானம் மூலமாக பலாலி விமான நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

குறித்த பெண் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |