உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு(படங்கள்)
உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக தமிழர் பேரவையினர் கொழும்பை மையப்படுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை முதலில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களுக்கு எதிரான கருத்துக்களை கடந்த காலங்களில் வெளிப்படையாக கூறி வந்த பௌத்த மத பீடங்கள், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்ற நன்சாற்றை உலக தமிழர் பேரவையினர் வழங்கியமை தமிழ் மக்கள் மத்தியில் மேலும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம்
அந்த வகையில் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து 2500 ஆவது நாளான இன்று(25) உலகத் தமிழர் பேரவையினருக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.
உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும் அவர்கள் இமாலய துரோகிகள் எனவும் தெரிவித்திருந்ததோடு தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படம் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி இருந்தனர்.
இமாலய பிரகடனம்
இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார், நல்லிணக்கம் என்ற கருத்து சிங்கள சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு இணையானதல்ல; மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
கடந்த 14 ஆண்டுகளில், இனப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, LLRC, UNHRC தீர்மானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருவதை தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும், உண்மையில், நடைபெறும் நிகழ்வுகள் நல்லிணக்கக் கொள்கைகளுக்கு முரணானதாகவே தெரிகிறது.
தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |