கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற முயன்ற யுவதிக்கு நேர்ந்த துயரம்
கிணற்றில் விழுந்த தனது பூனையை மீட்க முயற்சித்த யுவதி அதே கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கேகாலை - வறக்காப்பொல பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவில் தனது தந்தையுடன் இணைந்து பூனையை வெளியே எடுப்பதற்காக கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த போது விபரீத நிலைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார்.
இரவில் கிணற்றுக்குள் விழுந்த பூனை
உயிரிழந்தவர் வறக்காப்பொல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய கே. பி. தினேத்ரி இமேஷிகா உதானி என்ற யுவதி ஆவார்.

இரவு 10 மணியளவில் பூனை கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டவுடன் தனது தந்தையுடனும் கிணற்றடிக்கு சென்றுள்ளார். கிணறு தரை மட்டத்திலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்ட ஒன்றாக இருந்தபோதிலும், அவர் தனது கைத்தொலைபேசியின் டோர்ச் லைட்டை ஒளிரவிட்டு கிணற்றின் உட்பகுதியைப் பரிசோதித்துள்ளார்.
கிணற்றில் விழுந்து கிடந்த பூனையைக் கண்ட தந்தையும் தினேத்ரியும், அதை வெளியே எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திடீரென கிணற்றுக்குள் விழுந்த யுவதி
அதற்கமைய, டோர்ச் லைட்டை பிடித்திருந்த யுவதி திடீரென கிணற்றிற்குள் தவறி விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கிணற்றுக்குள் விழுந்தவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு நிட்டம்புவ வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.. எனினும் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யுவதி கிணற்றுக்குள் விழும் போது கொங்கிரீட் பகுதியில் தலை பலமாக மோதியதால் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |