புடினை நண்பர் என குறிப்பிட்ட ட்ரம்ப்: கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஜெலன்ஸ்கி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) என் நண்பர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டதற்கும் அவருடன் ஆரத்தழுவும் புகைப்படத்தைப் பகிர்ந்ததற்கும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாலிஸ்டிக் ஏவுகணை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
நிச்சயமாக இது அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பம் ஆனால் அது விசித்திரமானது எனத் தெரிவித்துள்ளார்.

புடின் ஒரு ஆக்கிரமிப்பாளர் மற்றும் கொலையாளி எனக் குறிப்பிட்ட அவர், அவரால் ஒருபோதும் நண்பராக இருக்க முடியாது என்றும் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரை நண்பர் என்று கூறியதற்கு இது ஒப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ரஷ்யாவுக்குப் போதுமான அழுத்தம் கொடுப்பதில்லை என ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏவுகணை
மேலும், முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களால் உக்ரைனில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ளப் பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கின் பக்கம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே அமெரிக்கா நடுநிலையாக இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் வெளிப்படையான முன்னேற்றம் இல்லை என்ற போதிலும் டிசம்பரில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெற்ற சந்திப்புகளுக்குப் பின்னர் புடினுடன் தனக்கு மிகச் சிறந்த உறவு உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்கள் மற்றும் குளிர்கால நெருக்கடிகளுக்கு மத்தியில் உக்ரைனின் பாதுகாப்புத் தேவைகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |