தடை செய்யப்படும் 146 சூதாட்ட இணையதளங்கள்!
இலங்கையில் உரிமம் பெறாத 146 இணையவழி சூதாட்ட இணையதளங்களைத் தடை செய்யுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கையிலிருந்து அந்த இணையதளங்களுக்கான அணுகலைத் தடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹெரத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதக் குற்றம்
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, 2025-ஆம் ஆண்டின் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் சட்டம், இலக்கம் 17-இன் விதிகள் மற்றும் அதிகாரங்களுக்கு இணங்க வெளியிட்ட ஓர் அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய சட்டத்தின் 15, 16 மற்றும் 18-ஆம் பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் இலங்கையில் இணையவழி சூதாட்ட சேவைகளை இயக்குவது அல்லது ஊக்குவிப்பது, அச்சட்டத்தின் 44-ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு சட்டவிரோதக் குற்றமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |