சர்வதேச மனக்கணித போட்டியில் யாழிலிருந்து 19 மாணவர்கள் பங்கேற்பு
2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியாவில் எதிர்வரும் 03ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை குறித்த போட்டியில் 80இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளையவர்களின் திறமை
மாணவர்கள் போட்டியில் பங்கேற்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, போட்டிக்கு அனுப்பி வைத்துள்ள UCMAS இன் திருநெல்வேலி கிளையினர் தெரிவிக்கையில்,
“எமது பயிற்றுவிப்பாளர்களின் மாதக்கணக்கான அர்ப்பணிப்பும், பல வருட அனுபவமுமே இந்த இளையவர்களின் திறமைகளை இந்த அரங்குக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் அவர்கள் இலங்கையை பெருமைப்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலிக் கிளையின் 17 வருட சாதனைப் பயணம் புத்தாக்கம் மிக்க மாணவர்களை உருவாக்குவதில் பாரிய வெற்றி கண்டிருப்பதனை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளின் மூலமாகக் கண்டு கொள்ள முடியும்.
சர்வதேச போட்டிகள்
ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டி வெற்றிகளில் யாழ். திருநெல்வேலி UCMAS கிளை முன்னணி வகிக்கின்றது.
80 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றும் இந்த சர்வதேசப் போட்டியில் யாழ் மண்ணின் இளைய மைந்தர்கள் வெற்றி வாகை சூடி எம் நாட்டிற்கும் எம் மண்ணிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம்” என தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |