சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் மீண்டும் தடம் பதிக்கிறது இலங்கை!
சவுதி அரேபியாவில் உள்ள அபா விளையாட்டுக் கலையகத்தில் இலங்கை மற்றும் யேமன் அணிகளுக்கு இடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை ஆகியவற்றுக்கான தகுதிச் சுற்றுக்கான முதல் போட்டி இன்று (12) இடம்பெறவுள்ளது.
FIFA வினால் விதிக்கப்பட்ட தடை காரணமாக சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கை தேசிய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தது.
இந்த நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை தேசிய அணி கால்பந்து விளையாடும் முதல் சர்வதேச போட்டியாக இது கருதப்படுகிறது.
முதல் போட்டி
FIFA உலக தரவரிசையில் யேமன் அணி 156 வது இடத்திலும், இலங்கை அணி 202வது இடத்திலும் உள்ளன, இருப்பினும் இதுவரை இரு அணிகளும் மோதிக்கொண்டதில்லை.
அந்தவகையில் இரண்டு அணிகளும் களம் காணும் முதல் போட்டியாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.
அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஆண்ட்ரூ ஜான்சன் அவர்கள் தங்கள் வலிமைக்கு ஏற்ப விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், ஒக்டோபர் 17ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள சுற்றுப்போட்டிக்கு தலைவராக அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட வீரரான சரித ரத்நாயக்கவையும், இரண்டாவது சுற்றுப்போட்டிக்கு ஹர்ஷ பெர்னாண்டோவும் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
சுற்றுப்போட்டிகளில் வெவ்வேறு தலைவர்கள் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை எனவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது,
இந்தநிலையில், உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டிகளுக்குப் பிறகு நிரந்தர தலைவரை தெரிவுசெய்யவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் முடிவெடுத்துள்ளது.