உருக்குலைந்த லிபியா! 20,000 பேர் பலியென அச்சம்
லிபியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கலாமென கடுமையான பாதிப்புக்கு உள்ளான துறைமுக நகரமான டெர்னாவின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முறையான மக்களுக்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கைகளை விடுத்திருந்தால் இவ்வாறான பாரிய உயிர்ப்பலிகளை தவிர்த்திருக்க முடியுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(10) ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் நாட்டின் கிழக்குப் பகுதியை அழித்துள்ள நிலையில் அந்த பகுதியில் வாழ்ந்த முழு குடும்பங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகியிருக்கலாம் என டெர்னா நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
தற்போதும் லிபியாவில் கடும் மழைபெய்து வருகிறது.
சுராசரியாக ஒரு மாதத்தில் கிட்டவேண்டிய மழைவீழ்ச்சியை விட 260 மடங்கு அதிகமான அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மழைபெய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் தூக்கத்தில் இருந்த வேளை இந்த நகரிலுள்ள இரண்டு அணைகள் உடைந்ததால் அவற்றில் இருந்து வெளிப்பட்ட நீர் ஆழிப்பேரலை போல வேகமாக பாய்ந்து அனைத்தையும் வாரி சுருட்டி கடலில் தள்ளியதாக டெர்னா நகர முதல்வர் குறிப்பிடுகிறார்.
முன்னெச்சரிக்கை
இந்த நிலையில் அணைகள் உடைப்பெடுக்கும் சாத்தியங்கள் குறித்து அதிகாரிகள் மக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கைகளை விடுத்திருந்தால் இவ்வாறான பாரிய உயிர்ப்பலிகளை தவிர்த்திருக்க முடியுமென ஐக்கியநாடுகள் சபை இன்று(14) தெரிவித்துள்ளது.
லிபியாவில் இயங்கும் போட்டி அரசாங்கங்களின் முரண்பாடுகள் காரணமாக மக்களுக்குரிய முன்னெச்சரிக்கைகள் விடுக்கபடவில்லையென கருதப்படுகிறது.
தற்போதைய நிலையில் இந்த பேரழிவில் அதிகாரபூர்வமாக 6,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் 10,000 பேரைக் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வெள்ளநீரால் அழிக்கப்பட்ட சமூகங்களில் ஏற்கனவே வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது 20,000 பேர் வரை பலியாகியதாக தெரியவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுவரை மீட்கப்படாத ஏராளமான உடல்கள் அழிவுகளின் இடிபாடுகளுக்கு அடியிலும் கடலிலும் இருப்பதால் உயிர் தப்பிய மக்கள் கடுமையான தொற்று நோய் அபாயத்தை எதிர்கொள்வதாகவும் டெர்னா முதல்வர் கவலை தெரிவித்தார்.
நோய் பரவும் அபாயம்
அவரது கவலையை ஆதாரப்படுத்துவது போல அசுத்தமான தண்ணீரால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக ஐ.நாவும் எச்சரித்துள்ளது.
தற்போது டெர்னாவில் வாழும் மக்களுக்கு லிபியாவின் ஏனைய பகுதிகளில் இருந்து ஐ.நா உணவுப் பொருட்களை அனுப்பிவருகிறது.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் உள்ளூர் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
தற்போது 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் லிபியாவில் உள்ள போட்டி அரசாங்கங்கள் இரண்டுமே இந்த பாதிப்புகளை மையப்படுத்தி சர்வதேச உதவிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.