ஆரம்பமானது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயார்படுத்தல் பணிகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்காளர் அட்டைகள்
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் கட்டாயமாக வருகைதர வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (Election Commission) தெரிவித்தார்.
அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்குச் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள்
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000இற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) தெரிவித்தார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக சுமார் 3,000 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக PAFFREL அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
