2026 ஐ.பி.எல் மினி ஏலம்! முக்கிய வீரர்களை நீக்கும் சென்னை அணி
இந்தியன் ப்ரீமியர் லீக் 2026 தொடருக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்போகும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப் போகும் வீரர்களை பட்டியலிட்டு நிர்வாகத்திடம் முறைப்படி தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மினி ஏலத்திற்கு முன்னதாகவே பல்வேறு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை வெளியேற்றிவிட்டு மினி ஏலத்தில் கலந்து கொள்ளும்.
சென்னை சுப்பர் கிங்ஸ்
அந்த வகையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கடந்த இரண்டு முறை பிளேஆப் சுற்றுக்கு செல்லாத காரணத்தினால் அணியிலிருந்து சில வீரர்களை நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 5 வீரர்களாக தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிப்பாதி, டேவான் கான்வே, சாம் கரண் ஆகியோரை சென்னை அணி விடுவிக்க தீர்மானித்துள்ளது.
குறித்த வீரர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் முக்கிய நட்சத்திர வீரர்கள் பலரை சென்னை அணி இந்த மினி ஏலத்தில் குறிவைத்து வாங்கக்கூடும் என தெரியவருகிறது.
அவர்களுள் தற்போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை சேர்ந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி குறி வைக்கும் என அறியவருகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
