ஹொரணையில் 35 மில்லியன் ரூபாய் வங்கி கொள்ளை: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை
ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை தொடர்பான விசாரணைகள் பேலியகொட வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை மா அதிபரின் விசேட உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைக் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவிக்காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் வளாகத்தினுள் நேற்று (03-06-2026) பிற்பகல் மூன்று கோடியே 50 இலட்சம் ரூபா (ரூ. 35,000,000) பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இதன்போது வங்கியின் உதவி முகாமையாளரால் வேறு இரு சேவை மையங்களுக்குக் கொண்டு செல்வதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த பணப்பைகளை இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வங்கிக்கு வெளியே எடுத்துச் சென்ற போதே வங்கி வளாகத்தினுள் வருகை தந்த நபரொருவர் பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வங்கி முகாமையாளருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் உடனடியாகச் செயற்பட்டு வங்கி வளாகத்திற்கு வெளியே சோதனையிட்டுள்ளார்.
பெரும் தடை
இருப்பினும் சந்தேகத்திற்கிடமான எவரையும் அவரால் அடையாளம் காண முடியாமல் போனதை அடுத்து வங்கி நிர்வாகத்தினர் இது குறித்து உடனடியாக 119 என்ற காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
காவல்துறை விசாரணைகளின் போது 5000 ரூபா தாள்களைக் கொண்ட 35 மில்லியன் ரூபா பணம் அடங்கிய குறித்த அரச வங்கியின் இலச்சினையைக் (Logo) கொண்ட வெளிர் கிரீம் நிறத்திலான இரண்டு பைகளே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பணப்பைகளுக்குப் பொறுப்பாக இருந்த உதவி முகாமையாளர் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உதவி முகாமையாளர் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து (Safe) பணத்தை எடுக்கும் காட்சிகள் வங்கியினுள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி (CCTV) கேமராக்களில் பதிவாகியுள்ள போதிலும் வங்கியின் வெளியேறும் கதவுக்கு அருகிலுள்ள பகுதியை உள்ளடக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்காமை விசாரணைகளுக்குப் பெரும் தடையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |